Monday 18 April 2016

நாட்டின் கடுமையான பொருளாதாரச் சூழலிலும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறப்பாக பணியாற்றியுள்ளது – தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் 2016ம் ஆண்டு ரயில்வே வார விழாவில் உரை


சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை திரு.சுப்ரான்சு சேலம் ரயில் நிலைய மேலாளர் திரு.முருகேசனிடம் வழங்குகிறார். அருகில் திரு. ஆர்.எஸ்.சின்ஹா
சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை திரு.சுப்ரான்சு மோகனூர் ரயில் நிலைய மேலாளர் திரு.விஜயகுமாரிடம் வழங்குகிறார். அருகில் திரு. ஆர்.எஸ்.சின்ஹா
 திரு சுப்ரான்சு விழாவில் உரையாற்றுகிறார்
 அலங்கரிக்கப்பட்ட விழா மேடை
விழாவில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதி

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (18.04.2016) 61வது ரயில்வே வார விழா சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 1853ம் ஆண்டில் இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இவ்விழா நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது.

விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்ட ரயில்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பான ரயில் தடப்பகுதி போன்றவற்றிற்காக 14 சுழற்கேடயங்களை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர்களுக்கு வழங்கினார். சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை சேலம் ரயில் நிலைய மேலாளர் திரு. முருகேசன் அவர்களும், சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை மோகனூர் ரயில் நிலைய மேலாளர் திரு. விஜயகுமார் அவர்களும். திரு சுப்ரான்சு அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.  இது தவிர 4 அதிகாரிகள் உள்பட 240 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு திரு. சுப்ரான்சு அவர்கள் கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி ஜோத்சனா பிரசாத் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

விழாவில் பேசுகையில் திரு. சுப்ரான்சுசு சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில், நாடெங்கிலும் கடுமையான நிதிச்சூழலிலும் சிறப்பாக பணியாற்றி மேம்பாடு கண்டிருப்பதாக தெரிவித்தார்.  பயணிகள் வருவாய் ரூ.459 கோடியில் இருந்து ரூ.477 கோடியாக 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பயணச்சீட்டு சோதன வருவாய் ரூ.4.49 கோடியில் இருந்து ரூ.4.96 கோடியாக 10.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதர வருவாய் ரூ.36.3 கோடியில் இருந்து ரூ.40.3 கோடியாக 11.04 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், விளம்பர வருவாய் ரூ.4.63 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உணவக வருவாய் ரூ.2.08 கோடியில் இருந்து ரூ.2.78 கோடியாக 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வாகன நிறுத்துமிட வருவாய் ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.68 கோடியாக 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அவர் சொன்னார்.

ரயில்களின் நேரந்தவறாமை, 93.5 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கடும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகள் ரூ.990  கோடியில் இருந்து ரூ.890 கோடியாக அதாவது 10  சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவிம் சொன்னார். 

பயணிகள் வசதி மேம்பாட்டிற்காக, சேலம் ரயில் நிலையக் கட்டிடம் விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கு கோயம்புத்தூர், விஜயமங்கலம், மற்றும் தொட்டிப்பாளையம் ரயில் நிலைய புதிய கட்டிடங்கள், திருப்பூரில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை, கரூரில் புதிய பயணிகள் தங்கும் அறை, ஈரோடு ரயில் நிலையம் முன்பு அழகிய தோட்டம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில்  கட்டண அடிப்படையிலான குளிர்வசதி செய்யப்பட்ட தங்கும் அறைகள், ஸ்மார்ட் கார்டு மூலம் இயங்கும் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், 6 நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு மூலம் இயங்கும் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை சேலம் கோட்டம் செய்திருப்பதாக சொன்னார். 

மேலும், இம்மாத இறுதிக்குள் சேலம் ரயில் நிலையத்தில் 2 நகரும் மின்படிக்கட்டுகள் (escalators) நிறுவப்பட்டு விடும் என்றும், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ரயில்நிலையங்களிலும் அவை நிறுவப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.   தெற்கு ரயில்வேயிலேயே முதன் முறையாக ஈரோட்டில் தனியார் மூலம் இயங்கும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் நிறுவப்பட்டுள்ளதாக சொன்ன அவர், பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலைய கட்டிடம் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நவீன முறையில் கட்டப்பட உள்ளதாகவும், விரைவில் 6 முக்கிய ரயில்நிலையங்களில் 40 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் சொன்னார். 

பயணிகள் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் தொலைபேசி, டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், ஈமெயில் மற்றும் புகார் இணையதளம் மூலமாக பெறப்பட்டு சரிசெய்யப்படுவதை பயணிகள் பெருமளவில் பாராட்டியுள்ளதாக தெரிவித்தார்.  பயணிகள் ஒத்துழைப்பினாலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாலும், தேசீய அளவில் சுத்தமாக பராமரிக்கப்பட்ட ஏ பிரிவு ரயில்நிலையங்கள் பட்டியலில், சேலம், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் முதல் 20 ரயில் நிலையங்களுக்குள் இடம் பெற்றிருப்பதாகவும், அதில் சேலம் 7வது சுத்தமான ரயில் நிலையமாக தேர்வு பெற்றிருப்பதாகவும், ஏ1 பிரிவு ரயில் நிலையங்களில் கோயம்புத்தூர் ரயில்நிலையம் இந்தியாவிலேயே 13 வது சுத்தமான ரயில்நிலையமாக தேர்வு பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

பாதுகாப்பை பொறுத்த வரையில் கடந்த ஆண்டில் 5 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், 10 லெவல் கிராசிங்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் அவை மூடப்பட்டு விடும் என்றும், மேலும் 20 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ஊழியர் நலனைப் பொறுத்தவரையில், சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டில் 1345 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும், இது 2014ம் ஆண்டின் எண்ணிக்கையான 627 ஐ விட 114 சதவீதம் அதிகம் என்றும், 9000 சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் ஸ்கேனிங் செய்யப்பட்டு அவை அவர்கள் பணி ஓய்வு பெறும் போது குறுந்தகட்டில் (CD) பதிக்கப்பட்டு பாதுகாப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஈரோட்டில் ரூ 5.5 கோடி செலவில் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ரயில்வே மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளை விட தரமாக இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளதாக தெரிவித்த திரு. சுப்ரான்சு இது வரை பாலக்காடு கோட்டத்தில் இது வரை இயங்கி வந்த ஊழியர்கள் கணினி பணிப்பதிவேடுகள் தற்போது முழுமையாக சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் உள்ள கணினிக்கு மாற்றப்பட்டு விட்டதால், இனி சேலம் கோட்ட ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிப் பதிவுகள் சேலம் கோட்டத்திலேயே பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தெற்கு ரயில்வே தலைமையக ரயில்வே வார விழாவில் சேலம் கோட்டம் பணியாளர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்கான சுழற்கேடயம் மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட செயல்பாட்டிற்கான சுழற்கேடயம் இரண்டையும் பெற சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார்.

விழாவில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.  வந்திருந்தோரை மகிழ்விக்க ஊழியர்களின் கலை நிகழ்ச்சிசகள் நடைபெற்றன. முன்னதாக சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் திரு. சின்ஹா அவர்கள் வந்திருந்தோரை வரவேற்றார். சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் திரு. ஜி ஜனார்த்தனன் நன்றியுரை வழங்கினார்.  

No comments:

Post a Comment